உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

சித்திரைத் திருவிழா



மதுரையில் நடைபெறும் முக்கியமான விழா சித்திரைத் திருவிழா. கோடைகாலமான ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவிற்கு தென்னிந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பக்தர்களும், யாத்ரீகர்களும் வருவது வழக்கம். இந்த மாதத்தில்தான் மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருமணவிழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்த திருவிழாவிற்கு மட்டுமே மதுரைக்கு சுமார் பத்து லட்சம் மக்கள் வெளியூரிலிருந்து வருவார்கள். "கோவிந்தா" என்று லட்சக்கணக்கான மக்கள் முழங்க அழகர் ஆற்றில் இறங்குவார். மதுரையில் நடந்த வைணவ மற்றும் சைவ மதத்தினருக்கு இடையேயான சண்டையை தவிர்க்க திருமலை நாயக்கரால் முதல் முதலாக இரு மதத்தினருக்கும் பொதுவான திருவிழாவாக சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், எதிர் சேவை, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குவது என்று நீண்ட நாட்களாக நடைபெறும். இந்த விழாவின் உச்சகட்டம் அழகர் ஆற்றில் இறங்குவது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சுமங்கலிகள் புதிய தாலிக்கயிறு அணிவார்கள். வேண்டுதலுக்காக அன்று சில பக்தர்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் புதிய தாலிக்கயிறு வழங்குவார்கள். எதிர் சேவையின் போது அழகர் அணிய ஆண்டாள் (சூடித்தந்த சுடர்க்கொடி) திருக்கோவிலில் இருந்து மாலை வரும்.

அழகர் தங்க குதிரையில் மதுரைக்கு தன் தங்கை கல்யாணத்திற்காக பவனி வருவார். அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் பல்லகில் மதுரை வரை வருவார். வரும் வழயில் இருக்கும் 18 மண்டபங்களில் ஓய்வெடுத்து நிதானமாக வலம் வருவார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அழகர் வருவதற்கு முன்னால் அவரது உண்டியல்கள் வரும். அழகர் என்ன பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவும். பச்சை பட்டு உடுத்தி இறங்கினால் அந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அழகர் வரும்பொழுது அவர் ஆற்றில் இறங்குவதற்க்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

அழகர் திருவிழா நடைபெறுவது கோடைகாலத்தில். அதனால் அழகர் வரும் பாதை முழுவதும் நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களினால் அமைக்கப்பட்டிருக்கும். பலியிடல், மொட்டை போடுதல்,நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும் மேற்கொள்ளப் படுகின்றன. கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் வெயிலின் உக்கிரத்தை குறைக்க மக்களின் மேல் நீரை பீய்ச்சி அடிப்பார்கள். விசிறிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். அன்னதானம் நடைபெறும்.

அழகர் திருவிழா நடைபெறும் பொழுது மட்டுமே மதுரையில் சீரணி விற்கப்படும். அதிலும் கருப்பட்டி சீரணி அமிர்தமாக இருக்கும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சி நடைபெறும். கோடைகாலத்தில் மதுரைச் சிறுவர்களின் ஒரே பொழுதுபோக்கு சித்திரைப் பொருட்காட்சி.



அழகர் வரும் பொழுது மக்கள் தங்கள் கைகளின் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களாகவே அழகரை நோக்கி ஆரத்தி எடுத்துக்கொள்வார்கள்.  "சாமி இன்னிக்கு எங்க இருக்குது" என்பதே சித்திரைத் திருவிழாவில் முக்கியமான கேள்வியாக மக்களிடையே இருக்கும்.

மதுரையை சுற்றி உள்ள கிராம மக்கள் அனைவரும் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு மதுரைக்கு திருவிழா காண வருவார்கள். மதுரையில் பொங்கல் அல்லது சித்திரைத் திருவிழாவிற்கு மட்டுமே வீட்டுக்கு வெள்ளை அடிப்பார்கள். ஊரே புத்தம் புதிதாக மாறி இறக்கும். சாதி, மதம் அனைத்தையும் கடந்து மதுரை மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழா சித்திரைத் திருவிழா.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...