உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 1 மே, 2012

அழகாய் அழகர் வராரு....

ரமாட்டு வண்டி பயணம், சர்க்கரை சொம்பில் சூட தரிசனம், ஜவ்வு மிட்டாய் என, மாறாத மண் மணத்துடன் நடக்கும், மதுரை சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது.
மே 2ல், நடக்கும் திருக்கல்யாணமாகட்டும், மே 3ம் தேதி நடக்கும் தேரோட்டமாகட்டும், மே 6ம் தேதி நடக்கும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவாகட்டும், மதுரையே பக்தி கோலம் பூண்டு விடும்.


திருவிழா தொடர்பான எத்தனை, எத்தனையோ கதைகள், அன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து வந்தாலும், அது எதைப் பற்றியும் கவலை இல்லாத மதுரை மக்கள், பத்து நாட்கள், தாயே மீனாட்சி என்று, மீனாட்சியை வித விதமான வாகனங்களில் பார்த்து வணங்குவர், திருக்கல்யாண கோலத்தில் பார்த்து பரவசம் அடைவர், தேரில் வைத்து பார்த்து மகிழ்ந்து மனம் உருகுவர்.
அதன்பின், அடுத்த பத்து நாளைக்கு வண்டி கட்டி, அழகர் மலையில் உள்ள அழகரை, கள்ளழகர் வாகனத்தில் கிளப்பி விடுவர், அவர் மதுரை நோக்கி வரும் வழியில், மண்டபகப்படிகள் அமைத்து, தங்க வைத்து அழகு பார்ப்பர், பின், மதுரைக்குள் நுழையும் போது, அவரை எதிர்கொண்டு வரவேற்று சேவித்து, எதிர் சேவையில் மகிழ்வர்,
எதிர்சேவை நிகழ்ச்சியென்பது, பார்ப்போரை, பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் கொண்டு சென்று விடும். அழகர் வேடமணிந்த துருத்தி நீர் தெளிப்போர், திரியெடுத்து ஆடுவோர், முத்துசோலிப்பல்வரிசை கட்டி ஆடுவோர் பலரும் தப்பும், தவிலும் வைத்து ஆடி வருவர். ஒரு பெருங்கூட்டமே அவர்களோடு ஆடி வரும். நகரத்து இளைஞர்களும், அவர்களோடு சேர்ந்து ஆடி மகிழ்வர். ஆடாத கால்களும், அன்று லேசாக ஆடும்.

குதிரை வாகனத்தில், அழகர் பெருமாள் கோவிலை விட்டு வந்ததும், தண்ணீரை அவர்மேல் பீய்ச்சி மகிழ்வர். அப்படியே குதிரை மிதந்து வருவது போலிருக்கும். அழகரை தூக்கி வரும் சீர்பாதம்தாங்கிகள், சில இடங்களில், அப்படியே சாமியை தண்டியலோடு வைத்து குலுக்குவர். பார்க்கவே கொண்டாட்டமாக இருக்கும். குதிரை, குலுங்க குலுங்க, மதுரையே குலுங்கும். "கோவிந்தோ!' குரல்கள், வானை பிளக்கும்.
அன்று இரவு, தல்லாகுளம் பெருமாள் கோவிலில் அவருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூட்டி மகிழ்வர், அப்படியே ஆயிரம் பொன் சப்பரத்தில் ஏற்றி, வைகை கரை வரை கொண்டுவந்த பின், அம்சமே உருவான தங்கக் குதிரை வாகனத்தில், அழகே உருவான அழகரை பட்டுடுத்தி, "பிடியுங்கள் கடிவாளத்தை...' என்று, தங்க குதிரையின் கடிவாளத்தை அழகரின் கையில் கொடுத்து இறக்கி விடுவர்.

இந்த காட்சியைக் காணத்தானே திரண்டு வந்தோம் என்பது போல, பரந்து விரிந்து வைகை ஆறு முழுவதையும் நிறைத்தபடி, லட்சக்கணக்கான பக்தர்கள், தங்களது கைகளில் வைத்திருக்கும் சுக்கு கலந்த, நாட்டு சர்க்கரை சொம்பின் மீது, சூடம் ஏற்றி காண்பித்து, கூடுதலாக, "கோவிந்தா கோவிந்தா' கோஷமிட்டு மெய்சிலிர்த்து வணங்கி மகிழ்வர்.

அதன் பின், வெளியூர் கூட்டம் பஸ் பிடித்து சென்றாலும், உள்ளூர் பக்தர்கள், அழகரை வண்டியூர் கொண்டு சென்று, ஓய்வு எடுக்க விட்டு, மறுநாள் விடிய, விடிய தசாவதார கோலத்தில் பார்த்து மகிழ்வர். பின், பூப்பல்லக்கில் ஏற்றி பிரியாவிடை கொடுத்து, மீண்டும் அழகரை மலைக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு, அதன்பின் தான் அடுத்த வேலையை பார்ப்பர்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...