உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 19 ஜூன், 2011

சிறப்பான சித்திரை திருவிழா

வணக்கம் அன்பு நெஞ்சங்களே, நமது கோவிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் உங்களுக்காகவே.

நமது கோவிலின் சித்திரை திருவிழா 17.4.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு நம் அனைத்து  சுவாமிகளுக்கும் அபிஷேகத்துடன் தொடங்கியது. பின் 12:00 மணிக்கு மேல் நம் சுவாமிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. முன் எப்போதும் இல்லாத அளவிற்க்கு வெளியூரில் இருந்து நம் பங்காளிகள் நிறைய பேர் காலையிலேயே வந்து அபிஷேகத்தில் கலந்து கொண்டனர், மதுரை,தேனி,கம்பம்,கானாடுகாத்தான்,சேலம்,விழுப்புரம்,திருநெல்வேலி,
திண்டுக்கல்,சென்னை மற்றும் கேரளாவிலிருந்தும் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அதுமட்டுமின்றி
இலங்கையிலிருந்தும் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நம் சுவாமிகளின் அருளாசியை பெற்று மகிழ்ந்தனர்.

நமது பூர்வீக கோவிலில் பூப்பந்தல் போடுவதற்காக பெண்கள் அனைவரும் மல்லிகை பூவை சரமாக தொடுத்தனர். பின் மதிய சாப்பாட்டிற்க்குப் பிறகு அனைத்து பங்காளிகளும் நமது பூர்வீக கோவிலில் கூடி பொங்கல் வைத்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்த ஸ்ரீ அழகரைப் போல் வேடமணிந்து, பெண்கள் அனைவரும் இந்த வருடம் கோவிலுக்கென பிரத்யோகமாக எடுத்த சேலையை  அணிந்து, கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் விண்ணை முட்ட பால் பழம் வைத்து வணங்கி மாலை 6:00 மணிக்கு மேல்  பெருமாளின் திரியையும், மாதா பெட்டியையும் எடுத்து பெருந்திரளாக நம் பங்காளிகள் அனைவரும் ஊர்வலமாக அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள நம் பெரிய கோவிலுக்கு சென்றோம். அங்கு நம் அனைவரின் துன்பங்களையும், கஷ்டங்களையும் போக்கி சகல சந்தோஷங்களையும் தருவதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாளையும், அருள்மிகு ஸ்ரீ சுந்தரவள்ளி தாயாரையும் அருள்மிகு ஸ்ரீ கோதைநாயகி தாயாரையும், அருள்மிகு ஸ்ரீ கோவிந்த விநாயகரையும், அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமியையும், அருள்மிகு ஸ்ரீ சப்பாணி சாமியையும் பூஜை செய்து வணங்கி அவர்களின் அருளாசியை பெற்று மகிழ்ந்தோம். பின் இரவு சாப்பாடு.  இந்த வருடம் நம் பெருமாளின் விருப்பப்படி திரியுடன் எண்ணிலடங்காத மக்கள் ஊர்வலமாக வந்து சிறப்பித்தனர். இது இனி வரும் வருடங்களிலும்  தொடர வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

18.4.11 திங்கள் கிழமை காலை 8:00 மணிக்கு முன்பாகவே கோவிலில் மக்கள் அலை மோதியது. காலை சிற்றுண்டி முடித்து 9:00 மணிக்கு மேல் நம் பூசாரி திரியை எடுக்க கருப்பனும்,சப்பாணியும் துணையிருக்க மாதாவும்,விநாயகரும் ஆசி வழங்க  அனைத்து பங்காளிகளும் புடை சூழ அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாத சுவாமியை  எதிர்சேவை செய்து நம் கோவிலுக்கு அழைத்து வந்து மரியாதை செய்து, பூஜைகள் செய்து வணங்கினோம். ஸ்ரீ கள்ளழகர் வேடத்தில் இருந்து ரெங்கநாதர்   நமக்கு அருளாசி வழங்கினார். பின் உச்சிகால பூஜை 12:00 மணிக்குமேல் நடைபெற்றது. நம் கோவிலின்  இளைஞர்கள்  குழு சார்பில் நடனப் போட்டி, பாட்டு போட்டி, பெருமாளின் ஸ்லோகம் எழுதும் போட்டி, மியூசிக் சேர் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இது தவிர தலைகட்டு வரிக்கும்,பிறந்த மகளிர் நன்கொடைக்கும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டது. இடையில் நம் பூசாரியின் மனைவியாரின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. பின் சுவாமிகள் இந்த வருடம் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட்டது. அனைவரும் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். மாலை 4:00 மணிக்கு மாதா முன்பாக நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.  நம் பூசாரியின் மனைவியார் குத்து விளக்கு பூஜையை சிறப்பாக நடத்தினார். மாலை 6:00 மணிக்கு மேல் எல்லா சுவாமிகளுக்கும் பூஜை செய்து பின் திரி எடுத்து  நம் கோவிலை வலம் வந்து பெரியசாமி அனைவருக்கும் திரிக்காப்பு வைத்தார், கருப்பசாமியும்,சப்பாணிசாமியும் அனைத்து பக்தர்களுக்கும் அருள் வாக்கு வழங்கினர். அனைத்து மக்களும் பெருமாள், தாயாரின் அழகினை கண்டு மயங்கி பிரிய மனமில்லாமல் வணங்கி சென்றனர்.

19.4.11 செவ்வாய் கிழமை காலையிலேயே பூஜை செய்து பெருமாள்,மாதா, விநாயகரின் சன்னதிகள் மூடப்பட்டன. பின் மாலை 4:00 மணிக்கு மேல் கிடாய்,சேவல் அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமிக்கும்,  அருள்மிகு ஸ்ரீ சப்பாணிசாமிக்கும் பலியிடப்பட்டது. இரவு 10:30 மணிக்கு மேல் அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமிக்கும்,  அருள்மிகு ஸ்ரீ சப்பாணிசாமிக்கும் தனித்தனியாக ஒன்பது இலைகளில் படையல் இடப்பட்டு பூஜை நடைபெற்றது. இருவரும் மிக்க மகிழ்ச்சியாக வந்து பூஜையை ஏற்றுக் கொண்டு வந்திருந்த அனைவருக்கும் அருளாசி வழங்கினர். அனைவரும் சாமி பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தனர். பின் மீதமான  பிரசாதத்தை கோவிலுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்தனர்.   அனைவரும் உண்ட பின்னர் எல்லோரும் கோவிலை விட்டு வெளியேறி ரோட்டில் நின்று பூசணிக்காய் சுற்றி உடைத்து விட்டு அவரவர் வீட்டிற்கு திரும்பினோம். இந்த வருட சித்திரை திருவிழா மிகமிக சிறப்பாக நடந்தது. நான் இங்கே சொல்லியது ரொம்ப கம்மிதான், சித்திரை திருவிழாவின் ஒவ்வொரு நொடியையும் நாங்கள் அனைவரும் பக்தியோடும்,மகிழ்ச்சியோடும் அனுபவித்தோம். இதை படித்தால் மட்டும் போதாது, அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். எனவே இந்த வருடம் வராதவர்களும் அடுத்த வருடம் வந்து பெருமாளை வணங்கி மகிழுங்கள். மேலும் நம் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற சேவை செய்த அனைத்து பங்காளிகளுக்கும்  நன்றி. புகைபடங்கள் அடுத்த பதிவில்.


கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...